பதிவு:2023-08-26 13:42:45
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு வளாகத்தில் முழங்கால் அளவிற்கும் மேலே மருத்துவக் கழிவுடன் கலந்த மழை நீரால் நோய் பரவும் அபாயம் :
திருவள்ளூர் ஆக 25 : திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் சுமார் 190 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய சென்னைக்கு நிகரான உயர்தர மருத்துவ சிகிச்சைகளை அளிக்கக்கூடிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு இயங்கி வருகிறது.அனைத்து வசதிகளுடன் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் தோற்றமளிக்கும் நிலையில் கனமழையின் காரணமாக கர்ப்பிணி பெண்கள் பிரிவு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு பகுதியில் மருத்துவக் கழிவுகளுடன் மழை நீர் கலந்து முழங்கால் அளவிற்கு மேலே தேங்கியுள்ளது.
இதனால் மருத்துவமனையில் நுழையும்போதே துர்நாற்றம் வீசுவதால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நோய்க்கு சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்கு பதிலாக மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு நோயை கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பிரம்மாண்ட முறையில் மருத்துவமனை கட்டப்பட்டாலும் மழைநீர் வடியும் அளவிற்கு வடிகால் வசதிகள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டும் பொதுமக்கள் உடனடியாக கழிவுநீர் மருத்துவக் கழிவுகளுடன் கலந்து நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோல் மீண்டும் மழை நீர் தேங்கி நிற்காத அளவிற்கு மாவட்ட நிர்வாகமும் மருத்துவமனை நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.