பதிவு:2023-08-26 14:08:13
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரத்தில் மின் பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி :
திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி (48). இவரது மனைவி சாவித்திரி (38). இவர்களுக்கு கலையரசன் (21) என்ற மகனும் தர்ஷினி (17) என்ற மகளும் உள்ளனர்.இவர் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஒயர் மேனாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கொண்டஞ்சேரி மேட்டுக் கண்டிகை பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அருள்ஜோதி அங்கு சென்றார். பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அருள்ஜோதி தூக்கி வீசப்பட்டார்.
இதனால் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்ஜோதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.