பதிவு:2023-08-26 14:12:02
அதிகத்தூரில் கடந்த 2 தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடி தண்ணீர் இல்லாமலும் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் அவதி : மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முற்றுகை :
திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் இந்திரா நகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாக ஊராட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்தும் அப்பகுதிக்கு டிராக்டர்கள் மூலம் குடி தண்ணீர் வழங்கப்படுகிறது. அதை பிடிப்பதற்கு பெண்கள் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக்கொண்டு கீழே விழுந்து பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும் மின்சாரம் இல்லாததால் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த இந்திரா நகர் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியகுப்பம் பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .இதையடுத்து அப்பகுதி மக்களிடம் பேசிய அதிகாரிகள் மின் இணைப்பு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.