பதிவு:2023-08-26 14:21:18
திருவள்ளூர் உணவு பொருள்களின் தரம் குறித்து இலவச பரிசோதனைக்கு ஏதுவாக நடமாடும் பகுப்பாய்வு வாகனம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள நடமாடும் பகுப்பாய்வு கூட வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்கள் தங்கள் உணவுப் பொருள்களின் தரம் குறித்து இலவசமாக பரிசோதனை செய்ய ஏதுவாக நடமாடும் பகுப்பாய்வு கூட வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நேரில் பார்வையிட்டு பரிசோதனை செய்யும் முறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார்.
பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் உணவு பொருள்கள் தரமானதுதானா என்பதை தங்களது இருப்பிடங்களுக்கு வந்து நடமாடும் பகுப்பாய்வு கூட வாகனத்தில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். தற்போது, இந்த வாகனம் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மாதம் வரையில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் நேரில் சென்று பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதோடு, இது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், துணை இயக்குநர்கள் ஜவஹர்லால் (திருவள்ளூர்) சுகாதாரப் பணிகள், செந்தில்குமார், (பூந்தமல்லி - சுகாதார பணிகள்), உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.