பதிவு:2023-08-26 14:24:40
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவுகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பரிமாறி தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார் :
திருவள்ளூர் ஆக 26 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக திருத்தணி ஒன்றியத்திற்குட்பட்ட சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவுகளை மாவட்ட ஆட்யர் ஆல்பி ஜான் வர்கீஸ் பரிமாறி அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாணவ- மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டதை பார்வையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை, ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் இத்திட்டம் துவக்கி வைக்கப்படுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊரகப்பகுதிகளில் உள்ள 1,016 பள்ளிகளில் பயிலும் 56,272 மாணாக்கர்களுக்கும் 6 நகராட்சி பகுதிகளில் உள்ள 49 பள்ளிகளில் பயிலும் 5,567 மாணாக்கர்களுக்கும் 7 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளில் பயிலும் 3,051 மாணாக்கர்களுக்கும் என மொத்தமாக 1,092 பள்ளிகளில் பயிலும் 64,890 மாணவ- மாணவியர்களுக்கு அனைத்து பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்காலை உணவு திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு அனைத்து தொடக்க பள்ளிகளிலும் திங்கட்கிழமைகளில் ரவா உப்புமாவுடன் காய்கறி சாம்பாரும் செவ்வாய்க்கிழமைகளில் சேமியா காய்கறி கிச்சடியுடன் காய்கறி சாம்பாரும் புதன்கிழமைகளில் வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பாரும் வியாழக்கிழமைகளில் அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பாரும் வெள்ளிக்கிழமைகளில் கோதுமை ரவா காய்கறி கிச்சடியுடன் காய்கறி சாம்பாரும் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலை உணவுகளை சமைப்பதற்கு பள்ளிகளில் மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பூதியமும் வழங்கப்படுகிறது.எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1092 பள்ளிகளே சார்ந்த 64,890 மாணவ மாணவியர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலமாக நாள்தோறும் பயன்பெறுவர்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஸ்ரீதர், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மோகனா, முன்னாள் திருத்தணி நகர மன்ற உறுப்பினர் பூபதி, திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கதனம் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திர பாபு, சந்தானம், வட்டாட்சியர் இ.மதன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.