பதிவு:2023-09-10 21:23:49
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ. 23.31 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் செப் 09 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி, விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில் 13 வட்டாரங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 54 இடங்களிலும், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் 3 இடங்களிலும் ஆக மொத்தம் 57 இடங்களில் திறக்க உத்தரவு வழங்கப்பட்டு தற்போது 47 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் தேவைக்கு ஏற்ப விரைவில் திறக்கப்படும். அரசாணை 114-ன் படி, விவசாயிகளிடமிருந்து குவிண்டால் ஒன்றுக்கு, சன்ன ரக நெல் ரூ.2310.00-ற்கும், பொது ரக நெல் ரூ.2265.00-ற்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாய பெருமக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் e-DPC வலைதளத்தில் பதிவுசெய்து தங்களுடைய நெல்மணிகளை விற்பனை செய்து பயன்பெறுமாறும்,தற்போது திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி வியாபாரிகள் தலையீடு மற்றும் கொள்முதல் தொடர்பாக எழும் பிரச்சனைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க்கும் தெரிவிக்க விவசாயிகளை கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த மாதம் பெய்த கனமழைக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய எச்சரிக்கை விடப்பட்டு இப்பிரச்சனை குறித்து வரும் மாதத்திற்குள் தீர்வு காண முழு வீச்சில் மாவட்ட நிர்வாகம் செயல்படும். ஊத்துக்கோட்டை வட்டத்தில் அமையவுள்ள அறிவுசார் நகரத்திற்கு நிலம் கையப்படுத்தப்படகூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இப்பொருள் குறித்து எழுத்துபூர்வமாக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுத்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பாக 6 பயனாளிகளுக்கு ரூ51,718 மதிப்பீட்டிலான வேளாண் இடுபொருள்களும் தோட்டக்கலைத் துறை சார்பாக 6 பயனாளிகளுக்கு ரூ.30,077 மதிப்பீட்டிலான தோட்டக்கலை இடுபொருள்களும் தாட்கோ சார்பாக மின் இணைப்பு வழங்கும் தட்கல் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக இலவச மின் இணைப்புகளும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கடல் கூண்டுகளில் மீன் வளர்ப்பதற்கான பணி ஆணைகளையும் விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு அங்கக சான்றுகளையும் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.23,31,795 மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். தொடர்ந்து ஆட்சியர் விவசாயிகளிடமிருந்து 212 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்ரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ், இணை இயக்குநர் (வேளாண்மை) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி,விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள, பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.