பதிவு:2022-05-09 18:46:42
கொழுந்தலூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி" “நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்”
திருவள்ளூர் மே 9 : தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகும் நிலையில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு துறைகள் சார்பாக செய்தியாளர் பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் செய்தியாளர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான செய்தியாளர்கள் பயணத்தின் போது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பூண்டி ஊராட்சி ஒன்றியம் கொழுந்தலூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் அனைத்து துறைகள் சார்பாக கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட விவரங்களை தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி" “நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்”, “திராவிட மாடல் வளர்ச்சி - திசையெட்டும் மகிழ்ச்சி” ஆகிய தலைப்புகளில் தயாரிக்கப்பட்டுள்ள ஓராண்டு சாதனை மலரை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
இந்த பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான செய்தியாளர்கள் பயணத்தின் போது திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டிக்கலை பகுதியில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யூ.எஸ்.341 மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் விநியோகம் செய்து, நடவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அச்சிவப்பு மிளகாய்கள் அறுவடை செய்யப்படுவதையும், வேளாண்மை விற்பனை – வேளாண் வணிகத்துறையின் சார்பாக செயல்பட்டு வரும் திருவள்ளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைந்தபட்ச ஆதார விலை 2021-2022 ராபி பருவம் பச்சைப்பயறு கொள்முதல் திட்டத்தின் கீழ் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு, நெல் தூற்றும் இயந்திரத்தின் செயல்பாடுகளை விவசாயிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பூண்டி ஊராட்சி ஒன்றியம், வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கொழுந்தலூர் அரசு விதைப்பண்ணையில் பத்தி முறையில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள நெல் வயல் பரப்பினையும், அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை சுத்திகரிப்பு செய்யும் பணிகளையும்,மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொடர்ந்து கொழுந்தலூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பாக கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட விவரங்கள் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களோடு கலந்துரையாடி அரசின் ஓராண்டு சாதனை மலர் தொடர்பான விவரங்களை தெரிவித்தார்.
பினனர் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர் பகுதியில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் மா – செடிகளை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.மேலும் திருத்தணி ஊராட்சி ஒன்றியம்,தாடூர் பகுதியில் சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு - குறு விவசாயிகளுக்கான 100 சதவிகித மானியத்தின் மூலம் வழங்கப்பட்ட சொட்டு நீர் பாசனத்தினை பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதியினை வேளாண் துறை அலுவலர்கள் செய்தியாளர்களுடன் பார்வையிட்டனர்.
இதில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) எல்.சுரேஷ்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன்,தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி,திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜே.மலர்விழி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சமுத்திரம்,தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் மணிகண்டன்,நந்தினி,சரத்குமார்,மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு,வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.