பதிவு:2023-09-10 21:25:46
திருவள்ளூர் மாவட்டத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பிற்கான வங்கிக் கடன் வழங்குவதற்கான சிறப்புக் கூட்டம்
திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பிற்கான வங்கிக் கடன் வழங்குவதற்கான சிறப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து கல்விநிறுவனங்களிலிருந்து கல்லூரி பிரதிநிதிகள், அனைத்து வங்கி மேலாளர்கள், அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பொது), வட்டார அளவிலான கற்போர் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான மேற்படிப்பிற்கான வங்கிக்கடன் எளிமையாக வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டு மேலும், மாணவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட அளவிலும் மற்றும் வட்டார அளவிலும் உதவி சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 23.09.2023 அன்று “மாபெரும் வங்கிக் கடன் முகாம்” மருத்துவக் கல்லூரி, திருவள்ளூரில் நடைபெற உள்ளது. அந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் விவரங்களை அறிந்து கொள்ள மாவட்ட அளவிலான உதவி சேவை மைய எண்கள் 9445346311 மற்றும் 9445346411 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.