பதிவு:2023-09-10 21:28:10
காக்களூர் ஆவின் பால் பண்ணையில் ஆவின் பாலில் முறைகேடு செய்த வாகன ஓட்டுநர் பணியிடை நீக்கம் : ஆவின் பொது மேலாளர் ஜி.ரமேஷ்குமார் உத்தரவு
திருவள்ளூர் செப் 09 : காக்களூர் ஆவின் பால் பண்ணையில் முறைகேடு செய்த இலகுரக வாகன ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாகவும், இவருக்கு உடந்தையாக இருந்த பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் மீதும் துணைப்பதிவாளர் (பால் வளம்) நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாகவும் ஆவின் பொது மேலாளர் ஜி.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூரில்உஉள்ள ஆவின் பால் பண்ணையில் அதிகாரி துணையுடன் விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கிய பாலில் கொழுப்பை பிரித்து தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததும், அதைத் தொடர்ந்து பால் பவுடரையும், தண்ணீரையும் கலந்து விற்பனை செய்வதாக ஆவின் நிறுவன ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.அதன்பேரில் துணைக்காவல் கண்காணிப்பாளர் சத்தியசீலன், காக்களூர் பால் கொள்முதல் பிரிவு உதவி பொது மேலாளர் சொர்ணாகுமார் ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்டம், ஜனகாபுரம் கிராமத்தில் உள்ள வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவரது வீட்டில் இருந்து 140 பால் பவுடர், 175 கிலோ வெண்ணைய் பவுடர், பால் கலக்கும் இயந்திரம், பாலில் இருந்து கொழுப்பை பிரித்தெடுக்கும் இயந்திரம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் குறித்து விசாரணை செய்ததில் காக்களூர் ஆவின் பால்பண்ணையில் இலகுரக வாகன ஓட்டுநராக ராஜ்குமார் பணிபுரிந்து வருவதாகவும்இவர்தான் இந்தப் பொருள்களை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்ததாக, அவரது தந்தையும், கே.ஜி.கண்டிகையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளருமான தயாளனும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஆவின் ஊழல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் காக்களூரில் உள்ள குளிர்பதன நிலையத்தில் பாலின மாதிரிகளை சேகரித்து மாதவரம் மத்திய ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில், அந்தப்பாலில் கலப்படம் இருப்பது உறுதியானது.இந்த நிலையில் தயாளன் ஏற்கெனவே ஆவினுக்கு பால் வழங்கி வருவதும் தெரியவந்தது. தந்தை வீட்டில் உள்ள பாலில் கொழுப்பை பிரித்த பிறகு ராஜ்குமார் அந்தப்பாலை ஜே.ஜி.கண்டிகையில் உள்ள தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் அளவை ஈடுசெய்ய பால் பவுடரையும், தண்ணீரையும் சேர்த்து அதை காக்களூர் கொண்டு வந்து, இங்குள்ள பாலுடன் சேர்த்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் ரமேஷ்குமாரிடம் கேட்ட போது, காக்களூரில் ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பால் பவுடர் மற்றும் வெண்ணைய் பவுடர் இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்போது சரியாக இருந்தது. இதற்கிடையே எங்கிருந்து பால் பவுடர் மற்றும் வெண்ணைய் பவுடர், இயந்திரங்கள் கொண்டு வந்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவின் பாலில் முறைகேடு செய்த இலகுரக வாகன ஓட்டுநர் ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், முறைகேடில் இவருக்கு துணையாக இருந்த பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் தயாளன் மீதும் நடவடிக்கை எடுக்கவும் துணைப்பதிவாளர்(பால் வளம்) பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.