பதிவு:2023-09-12 22:57:19
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் செப் 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 108 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 69 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 50 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 71 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 93 மனுக்களும் என மொத்தம் 391 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் ரூ5 இலட்சத்திற்கும் மேல் கொடிநாள் வசூல் செய்து வழங்கிய 11 அலுவலர்களுக்கு முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் வெள்ளிப் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். முன்னதாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, உலக வங்கி நிதி உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உரிமை திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்காக மாவட்ட திட்ட அலுவலர் (பயிற்சி) மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் (சமூகப் சேவை) ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு ஆட்சியர் பணி ஆணைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)(பொ), மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெ.ஹஷ்ரத் பேகம், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் ராஜலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன், முட நீக்கு வல்லுநர் பிரீத்தா, பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.