பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

பதிவு:2023-09-12 22:59:04



பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில்

திருவள்ளூர் செப் 12 : அனைத்து வகை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களிடையே தன் சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, காய்கறி தோட்டம், கழிவு மறுசுழற்சி மற்றும் நெகிழி இல்லா பள்ளி வளாகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம், அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டம் தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி பேசினார்.

இந்தத் திட்டத்தை பொறுத்தவரை நமது பள்ளியில் உள்ள அனைத்து பகுதிகளையும் தூய்மையாக சுத்தமாக பசுமையாக வைக்க வேண்டியது பள்ளி மாணவ மாணவியர்களின் பொறுப்பாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, இதுபோன்ற ஒரு முயற்சியை தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மூலமாக அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் மூலமாக ஒவ்வொரு மாதமும் 20 மரக்கன்றுகள் நட்டு அதை பராமரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் பள்ளியின் சுற்றுப்புறத்தை சுத்தமாக, தூய்மையாக வைத்து பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் காய்கறி தோட்டங்கள் அமைத்து அதனை முறையாக பராமரித்து அதன் மூலம் கிடைக்கும் சத்தான காய்கறிகளை உங்கள் பள்ளியின் சத்துணவில் பயன்படுத்துவதை வலியுறுத்தும் விதமாகவும் இன்று "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.

தமிழக அரசின் சீர்மிகு திட்டமான “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” எனும் திட்டத்தின் மூலம், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தன்சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, காய்கறித்தோட்டம், கழிவு மறுசுழற்சி மற்றும் நெகிழி இல்லா பள்ளி வளாகம் ஆகியன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை 1336 அரசுப்பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் , வாரத்தின் முதல் நாளன்று பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். கலைஞரின் நூற்றாண்டினை போற்றும் விதமாக ஒவ்வொரு மாதமும் 20 மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் வேண்டும். பள்ளியை சுத்தமாக தூய்மையாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் நோய்கள் பரவாமல் தடுக்கலாம் என்று கூறினார்.

முன்னதாக, நடைபெற்ற "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டம் தொடக்க விழாவில் பள்ளி தூய்மை உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, இப்பள்ளியில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை போற்றும் விதமாக மாதந்தோறும் 20 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியை துவக்கி வைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மதிய உணவு திட்டத்திற்கு உதவும் வகையில் பள்ளித் தோட்டம் உருவாக்கும் பொருட்டு ஆட்சியர் காய்கறி விதைகளை தூவி காய்கறி தோட்டம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் எம்.எஸ்.சுகானந்தம், பள்ளி தலைமை ஆசிரியர் நாகலிங்கம், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.