பதிவு:2023-09-12 23:00:23
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான ரீடத்தான்-2 போட்டிகள்
திருவள்ளூர் செப் 12 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான ரீடத்தான்-2 போட்டி நடைபெற்றது. பள்ளித் தாளாளர் விஷ்ணு சரண் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர். ஷாலினி அனைவரையும் வரவேற்றார்.
நூலகம் உருவாவதற்கு காரணமான நூலகத் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படும் டாக்டர்.எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு இடையே கதை கூறுதல், செய்தி வாசித்தல், வினாடி வினா, புத்தக மதிப்பீட்டுப் போட்டி என 9 வகையான போட்டிகள், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் நடைபெற்றன. இந்த மாவட்ட அளவிலான போட்டியில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் மத்திய அரசு பள்ளிகள் என 24 பள்ளிகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிக் கொண்டு வந்தனர்.
ஆசிரியர்களும், பெற்றோர்களும் இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது தனித் திறமையை வெளிக்கொண்டு வந்தனர்.நூலகத் தந்தை டாக்டர்.எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த மாபெரும் போட்டி, ஒவ்வொரு மாணவனும், ஆசிரியரும், பெற்றோரும் வாசிப்புப் பயிற்சியும் எழுத்து பயிற்சியையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும், தினந்தோறும் செய்தித்தாளைப் படிக்க வேண்டும்,பல்வேறு வகையான புத்தகங்களை படிக்க வேண்டும், என்ற உயர்ந்த நோக்கத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.
டாக்டர். இராதாகிருஷ்ணன் போன்ற தத்துவஞானி ஆகவும், அன்னை தெரசாவைப் போன்ற மனிதநேயப் பண்பாளராகவும், அப்துல் கலாம் போன்ற அறிவியல் மேதையாகவும் மாற, புத்தக வாசிப்பு மட்டுமே துணை புரியும் என்றும், ஒவ்வொரு புத்தகமும் நமக்கான வழிகாட்டி என்றும் பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் எடுத்துரைத்தார். இந்த போட்டி வருங்காலத்தில் மாநில அளவிலான போட்டியாக நடைபெறும் என்று தனது பொன்னான கருத்தைப் பதிவு செய்தார்.
இதில் துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர் சுஜாதா,ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இறுதியில் ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர். சதீஷ் மற்றும் நூலகர்கள் கவிராஜ், ஆனந்தவல்லி ஆகியோர் நன்றி கூறி மாணவர்களை வழி அனுப்பி வைத்தார்.