பதிவு:2023-09-12 23:01:56
திருவள்ளூரில் பட்டா வழங்கக்கோரி 27 முறை அதிகாரிகளிடம் அளித்த மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது என திருப்பி அனுப்பியதால் அந்த மனுக்களை மாலையாக அணிந்து மீண்டும் மனு அளிக்க வந்த இளைஞரால் பரபரப்பு
திருவள்ளூர் செப் 12 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 வருடங்களாக கிராம நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி நிரந்தர பட்டா இல்லாமல் குடியிருந்து வருகின்றனர்.மேலும் கடந்த 1977-ல் அப்போதைய தாசில்தார் பட்டா வழங்க ஆவணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் கிராமத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததால் அனைவரும் பட்டா பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.
மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நிரந்தர பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அதிகாரிகளால் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.இதனால் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் (29) என்ற இளைஞர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து அதிகாரிகளால் இதுவரை நிராகரிக்கப்பட்ட மனுக்களை மாலையாக அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய மனுவை அளித்தார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.