பதிவு:2023-09-12 23:03:17
வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனை முறையாக செலுத்தி வந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் கட்டாமல் போனதால் வீட்டை ஜப்தி செய்ய போவதாக மிரட்டுவதாக நெசவுத் தொழிலாளிமாவட்ட ஆட்சியரிடம் புகார்
திருவள்ளூர் செப் 12 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். நெசவுத் தொழிலாளி ஆன இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு நெசவுத் தொழிலாளியான அமர்தலிங்கம் சொந்தமாக வீடு கட்டுவதற்காக எக்விடாஸ் என்ற தனியார் வங்கி மூலம் ரூ.7 லட்சத்து 45 ஆயிரம் பணம் கடனாகப் பெற்றுள்ளார். தொடர்ந்து 25 மாதங்கள் பிரதி மாதம் 13 ஆயிரத்து 450 ரூபாய் பணத்தையும் செலுத்தி உள்ளார்.
இந்நிலையில் இவரது மகள் டெங்கு காய்ச்சலால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்தார். மேலும் மகனின் இரண்டு காதுகளும் வழக்கம் போல் இல்லாமல் முகத்தோடு ஒட்டி இருப்பதால் அதனை ஆபரேஷன் செய்து சரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். எனவே நெசவுத் தொழில் மூலம் வரும் சிறிய வருமானத்தை வைத்துக்கொண்டு மகனுக்கு மருத்துவ செலவு போக குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனால் வங்கியில் இருந்து வரும் ஊழியர்கள் கட்டாத பணத்தை உடனே செலுத்த வேண்டும் இல்லை என்றால் வீட்டை ஜப்தி செய்வோம் என்று கூறி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக செலுத்தும் கட்டணத்தை குறைத்து செலுத்த வேண்டிய காலத்தை நீட்டித்து தரும்படி வங்கி ஊழியர்களிடம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்து வீட்டு ஜப்தி செய்யப் போவதாக தொடர்ந்து எச்சரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே நெசவுத் தொழிலில் புதிய வருமானம் இல்லாமல் கூலி வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருவதால் குறைந்த அளவு பணத்தை நீண்ட நாள் சிறப்பு அவகாசத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவுத் தொழிலாளி அமிர்தலிங்கம் தனது மனைவி மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தார். மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். எனவே வீட்டை ஜப்தி செய்யப் போவதாக மீண்டும் வங்கி ஊழியர்கள் தெரிவித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.