கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 1500 கன அடி தண்ணீர் ஜீரோ பாயிண்ட் இடத்திற்கு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மலர்தூவி வரவேற்றார் :

பதிவு:2022-05-09 19:18:46



கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 1500 கன அடி தண்ணீர் ஜீரோ பாயிண்ட் இடத்திற்கு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மலர்தூவி வரவேற்றார் :

கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 1500 கன அடி தண்ணீர் ஜீரோ பாயிண்ட் இடத்திற்கு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மலர்தூவி வரவேற்றார் :

திருவள்ளூர் மே 09 : கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட ஒப்பந்தத்தின்படி, ஆந்திர அரசு தமிழகத்திற்கு இரண்டாம் தவணை (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) காலத்தில் 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையினை ஏற்று, ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் இடத்திற்கு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீரை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மலர்தூவி வரவேற்று பேசினார்.

கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட ஒப்பந்தத்தின் படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஒரு ஆண்டில், இரு தவணைகளில், முதல் தவணையான ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரையிலான நான்கு மாதங்களில் 8 டி.எம்.சி நீரும், இரண்டாம் தவணையான ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் 4 டி.எம்.சி நீருமாக மொத்தம் 12 டி.எம்.சி கிருஷ்ணா நீரை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில் வழங்க வேண்டும்.

இந்த நீராண்டில் ஆந்திர அரசு முதல் தவணையாக 4.479 டி.எம்.சி நீரை வழங்கியுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தெலுங்கு கங்கை திட்ட தலைமைப் பொறியாளர் அவர்களுக்கு கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடப்பட்டது. அதனை ஏற்று ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து 05.05.2022 அன்று காலை 8.45 மணிக்கு சென்னை குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு (08.05.2022) காலை 11.00 மணி அளவில் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில் வந்தடைந்துள்ளது. இந்த நீர் நாளை முற்பகல் பூண்டி நீர்த்தேக்கம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவான 3231 மி.க. அடியில் தற்போது 1357 மி.க. அடி கொள்ளளவு இருப்பில் உள்ளது.

எனவே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் முழு கொள்ளளவான 3.231 டி.எம்.சியில் தற்பொழுது 1.36 டி.எம்.சி. கொள்ளளவும், புழல் ஏரியின் முழு கொள்ளளவான 3.300 டி.எம்.சியில் தற்பொழுது 2.93 டி.எம்.சி. கொள்ளளவும், செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 3.645 டி.எம்.சியில் தற்பொழுது 2.463 டி.எம்.சி. கொள்ளளவும், சோழவரம் ஏரியின் முழு கொள்ளளவான 1.081 டி.எம்.சியில் தற்பொழுது 0.137 டி.எம்.சி. கொள்ளளவும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் முழு கொள்ளளவான 0.500 டி.எம்.சியில் தற்பொழுது 0.468 டி.எம்.சி. கொள்ளளவும் உள்ளது. ஆக மொத்தம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் முழு கொள்ளளவான 11.757 டி.எம்.சியில் தற்பொழுது 7.353 டி.எம்.சி. கொள்ளளவு நீர் மொத்தமாக உள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும் கிருஷ்ணா நீரின் மூலம் அதன் நீர் இருப்பு அதிகரிக்கப்பட்டு, இந்த வருடம் சென்னையின் குடிநீர் தேவையினை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று தெரிவித்துக் கொள்வதோடு, இவையெல்லாம் வருமுன் காப்போம் என்ற உணர்வின் அடிப்படையி;ல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் தான் சென்னை நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உரிய காலத்தில் இத்தகைய நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டுள்ளார் என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) எஸ்.கோவிந்தராஜன், கிருஷ்ணா நதி நீர் கோட்டம் நீர்வள செயற்பொறியாளர் தில்லைக்கரசி, உதவி செயற்பொறியாளர் டி.சண்முக சுந்தரம், உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழக – ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.