பதிவு:2023-09-12 23:04:34
கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் கதிர்வீச்சு பிரச்சனையால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு
திருவள்ளூர் செப் 12 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் டவர் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழநல்லாத்தூர் ஊராட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.ஊராட்சி மன்ற தலைவர் எம்.தேவதாஸ் மற்றும் துணைத் தலைவர் பரந்தாமன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே தனியார் (ஜியோ) நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ள நிலையில் தற்பொழுது கிராம பொதுமக்களின் எதிர்ப்பை மீறி ஏர்டெல் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் டவரில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாக கிராமத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு நோய் பரவி வரும் சூழ்நிலையில் இறப்பின் சதவிகிதமும் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் செல்போன் டவர் கதிர்வீச்சின் காரணமாக கால்நடைகளும் குழந்தைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி குன்றி நோய்வாய்ப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏர்டெல் நிறுவனம் சார்பில் நடைபெறும் பணிகளை உடனே தடுத்து நிறுத்தி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்-சை சந்தித்து கீழநல்லாத்தூர் கிராமத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.