பதிவு:2023-09-20 21:26:10
மொன்னவேடு மற்றும் எறையூர் ஊராட்சியில் உள்ள கிராம மக்களுக்கு மகளிர் உரிமைத் திட்ட தொகை வராததால் வட்டாட்சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருவள்ளூர் செப் 21 : மகளிர் உரிமைத் திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று தொடங்கி வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனையடுத்து பூண்டி ஒன்றியம் மொன்னவேடு, எறையூர் ஊராட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ சேவை மையத்திற்கு சென்று விசாரித்துள்ளனர்.
ஆனால் இங்கு கிடையாது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு சென்று விசாரித்ததில் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் பெண்கள் மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து, வசதி படைத்தவர்களுக்கெல்லாம் இந்த உரிமைத் தொகை வந்திருக்கிறது.
எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு ஏன் வரவில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து எங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்து தகுதியான நபர்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.