பதிவு:2023-09-20 21:27:51
தொழுவூரில் திருமணமாகி இரண்டு வருடங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை : சடலத்தை வாங்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் செப் 21 : திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி- மேனகா தம்பதியினரின் மகள் நாகராணி (33) என்பவருக்கும் - அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்- மேரி தம்பதியினரின் மகன் மதன் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது.மதன் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றது அப்பொழுது மதன் திருமண சீர்வரிசையாக 45 சவரன் நகை கேட்டுள்ளார். அதற்கு நாகராணி குடும்பத்தார் எங்களால் அவ்வளவு நகை தர முடியாது என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து சரி பரவாயில்லை நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தங்க நகை போடுங்கள் என்று சொல்லி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது . அதை தொடர்ந்து மூன்று மாதம் இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். அதை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு மதன் நாகராணியை தினமும் அடித்து சித்திரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மதனின் தாயார் நாகராணியை குழந்தை பாக்கியம் இல்லாதவள், தரித்திரம் புடிச்சவள் என தினமும் திட்டி சித்திரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (17-ஆம் தேதி) இரவு மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கு நாகராணியின் அம்மா மேனகா புகார் மனு அளித்தார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாபேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருமணம் நடந்து இரண்டு வருடங்களாகவும் நாகராணி வீட்டிற்கு அனுப்பவில்லை. இரண்டு பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பக்கத்து தெருவுக்கு அனுப்ப மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக மதன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து நகை கேட்டும், குழந்தை பாக்கியம் இல்லை என்று சித்திரவதை செய்வதாக பலமுறை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் பிரேதத்தை நாங்கள் வாங்க மாட்டோம். அந்த குடும்பத்தினர் என் மகளை அடித்து கொலை செய்து தூக்கில் மாட்டி உள்ளனர். எனவே இந்த சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளதாகும் என்று சாலை மறியல் செய்ய முயன்றனர்.
அப்பொழுது காவல் துறை தடுத்து நிறுத்தியதால் மருத்துவமனை வளாகத்தில் நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கையாக விடுத்தனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.