பதிவு:2023-09-21 19:50:29
மாளந்தூர் முதல் ஆவாஜிபேட்டை வரை பழுதடைந்துள்ள சாலை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் சாலை மறியல்
திருவள்ளூர் செப் 21 : திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவாஜிபேட்டை மற்றும் மாளந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 7,000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த மாளந்தூர் முதல் ஆவாஜிபேட்டை வரை 4 கி.மீ. தூரம் ஒன்றிய சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதில் ஒரு கி.மீ. நீளத்திற்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை வருகிறது.
வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைக்க அனுமதி மறுக்கப்படுகிறது.இந்த பகுதியில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதால் இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் தடம் எண் 92 பி, 73ஏ, மாநகர பேருந்து 580 எம் ஆகியவை குறித்த நேரத்திற்கு வருவதில்லை. சில நாட்களில் பேருந்துகளே வருவதில்லை. அந்த அளவிற்கு சாலை மோசமாக உள்ளது.இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்க ஜெல்லி உட்பட்ட பொருட்களைப் இறக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. இடையில் மாளந்தூர் வழித்தடத்தில் 600 மீட்டர் மற்றும் ஆவாஜிபேட்டை வழித்தடத்தில் 400 மீட்டர் என 1. கி.மீ. நீளத்திற்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை வருகிறது.இதற்கு வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி மறுக்கிறனர். இந்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல முறை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இந்த வழியாக பயணிக்கும் மாணவர்கள், விவசாயிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் தினம் பாதிக்கின்றனர்.இதில் சுவாரிசியம் என்னவென்றால், மாளந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோர்கள் தான் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை வனத்துறைக்கு தானமாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து சாலை பணிகளை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெங்கல்,சித்தேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் மாளந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.விஜயன் தலைமையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் போலீசார் மற்றும் செங்குன்றம் வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.சாலை மறியல் போராட்டம் காரணமாக சித்தஞ்சேரி,வெங்கல் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் கங்காதரன், கன்னியப்பன், வட்டக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், குமார், அருள் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.