கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் : அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்

பதிவு:2023-09-25 20:39:02



கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் : அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்

கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் : அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்

திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பாக மாநில அளவில் காசநோய் இல்லா தமிழ்நாடு எனும் இலக்கினை அடைய வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து, காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் தொடக்க விழாவில் 30 பயனாளிகளுக்கு தலா ரூ.1,600 வீதம் மொத்தம் ரூ.48,000 மதிப்பீட்டிலான‌ காச நோய் மருந்து பெட்டகங்களையும் 30 கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.60,000 மதிப்பீட்டிலான‌ ஊட்டச்சத்து பெட்டகங்களையும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கி பேசினார்.

மாநில அளவில் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காச நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது TB Active cases என்ற வகையில் 86,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கும் திட்டமும் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில் இதுவரை ரூ16 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த 86,000 நபர்களில் பெரும் பகுதியானவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,600 மதிப்பீட்டிலான புரதச்சத்துடன் கூடிய உணவு பெட்டகம் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 110 தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மூலமாக இந்த பெட்டகங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று ஆண்டுக்கு 17,000 எக்ஸ்ரே படங்களை எடுத்து பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த புதிய முயற்சியை வட்டார அளவிலான ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காச நோய்க்கான மருத்துவம் மருத்துவ சேவை, பரிசோதனைகள் போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை இங்கு தொடங்கி வைத்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, ஆரணி பகுதியில் வசிக்கும் 13 நபர்கள் எலுமிச்சம்பழச்சாறு அருந்தியதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை தொடர்ந்து அந்நபர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து பழக்கூடைகளை வழங்கி, நலம் விசாரித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வுகளில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி தலைவரும் திட்டக்குழு தலைவருமான கே.வி.ஜி. உமாமகேஸ்வரி, சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர் (மாநில காசநோய்) ஆஷா பெட்ரிக், இணை இயக்குநர்கள் சி.சேகர் (சுகாதாரப் பணிகள்), ப.சம்பத் (தொற்று நோய்), லட்சுமி முரளி (காசநோய்), துணை இயக்குநர்கள் ஜவஹர்லால் (சுகாதாரப் பணிகள்), செந்தில்குமார் (சுகாதாரப் பணிகள்), சங்கீதா(காசநோய்), திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திலகவதி, வில்லிவாக்கம் ஒன்றிய குழுத்தலைவர் ப. கிரிஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.