பதிவு:2023-10-03 23:01:07
திருவள்ளூர் மாவட்டத்தில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
திருவள்ளூர் அக் 03 : திருவள்ளூர் மாவட்டத்தில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், உளுந்தை ஊராட்சி கட்டடம் முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் எம்.கே.ரமேஷ் தலைமை வகித்தார். இதில் துணைத்தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் முன்னிலை வகித்தார். அப்போது, இந்தக் கூட்டத்தில் உளுந்தை ஊராட்சியைச் சேர்ந்த உப்பரப்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாதை வசதி கிடையாது. அதனால், அந்த மயானத்திற்கு எளிதாக சென்று வரும் வகையில் பாதை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், இந்த ஊராட்சியில் காலனி மயானத்திற்கும் பாதை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும்.
மேலும், இந்த ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆத்திரம் அவசரத்திற்கு வாகனங்கள் வர முடியாத நிலையில் குறுகியிருந்தது. இந்த நிலையில் அரை கி.மீ தூரத்திற்கு ரூ.2 கோடி மதிப்பிலான பாதைக்கான நிலத்தை ஊராட்சி தலைவர் தனது சொந்த செலவில் அளித்துள்ளார். அந்த இடத்தில் 60 அடி சாலை அரசு அமைத்துக் கொடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் துணைத்தலைவர் வசந்தா ரகு, வார்டு உறுப்பினர்கள் ஏ.காவேரி, எ.கோமதி, ஜி.மேகவர்ணன், கே.பத்மாவதி, எஸ்.சொர்ணாம்பிகா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தொடுகாடு ஊராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் பொது நிதி செலவீனம் மற்றும் திட்டப்பணிகள்,கிராம ஊராட்சி தணிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்,வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,ஜல் ஜீவன் இயக்கம்,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் மக்கள் திட்டமிடல் இயக்கம்,காசநோய் இல்லாத கிராம ஊராட்சியாக அறிவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை கிராம சபையில் அறிவிக்கப்பட்டது. இதில் தொடுகாடு ஊராட்சி துணை தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியின் தலைவர் சுனிதா பாலயோகி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் யோகானந்தம் கலந்து கொண்டு வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு தடுக்க வேண்டும் உள்ள அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.