பதிவு:2023-11-01 19:53:33
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்குச் சென்று வருவதற்கு எதுவாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் :
தமிழக மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற திட்டங்களை தீட்டி, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொன்னான திட்டங்களில் ஒன்றான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த எண்ணற்ற பள்ளி மாணவ மாணவியர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.மாணவ,மாணவியர்கள் கல்வியில் சிறந்தோங்க கல்வித்துறைக்காக ரூ.36,891 கோடி ஒதுக்கீடு செய்து, பல்வேறு சீரிய சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்தியும் வருகிறார்.
அதன் அடிப்படையில், மாணவர்கள் சரியான குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் எனவும் மாணவ, மாணவியர்கள் இரயில் மற்றும் பேருந்துக்காக காத்திருக்காமல் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசின் மாணவ மாணவிகளுக்கான இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பகுதியாக நிதி உதவி பெற்று அதில் சுயநிதி அடிப்படையிலான மேல்நிலைப் பாடப் பிரிவு வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 17,477 மாணவர்களுக்கும் 23,961 மாணவியர்களுக்கும் என மொத்தம் 41,438 மாணவ மாணவியர்களுக்கு ரூ.21,01,56,787 மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் மூலமாக பயனடைந்து வரும் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் அகரம் ஊராட்சியைச் சேர்ந்த மாணவன் டி.கலைமணி என்பவர் தெரிவித்ததாவது :
நான், கும்மிடிப்பூண்டி, கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். நான் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், அகரம் கிராமத்திலிருந்து தினந்தோறும் சுமார் 12கி.மீ. பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்கு வந்து செல்கிறேன். வீட்டிலிருந்து போக்குவரத்திற்கென தனியாக வாகன வசதிகளின்றி பேருந்து மூலமாகவும் நடந்தும் சென்று தான் பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக வழங்கிய விலையில்லா மிதிவண்டி, எனக்கும் கிடைத்ததன் காரணமாக, பேருந்துக்காக காத்திருப்பதும் தாமதமாக பள்ளிக்கு வருவதும் தவிர்க்கப்பட்டு குறித்த நேரத்திலும் யாருடைய உதவியும் இன்றி பள்ளிக்கு வந்து செல்கிறேன். ஆகவே, மிதிவண்டிகளை வழங்கி எங்கள் கல்விக்கு பேருதவி புரிந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி எ.வின்சிமனோ ஜெனி என்பவர் கூறியதாவது : நான் எனது தந்தையின் உதவியோடு தான் பள்ளிக்கு வந்தேன். சில நேரங்களில் நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. இதனால் பள்ளிக்கு செல்வதாக இருந்தாலும் பிற இடங்களுக்கு செல்வதாக இருந்தாலும் தாமதமாகவே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனக்கு மிதிவண்டியை இயக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்தது. இந்த நிலையில் தான், முதலமைச்சர் பள்ளி மாணவ மாணவியர்ளுக்காக இலவச மிதிவண்டிகளை வழங்கினார். அதன் மூலமாக எனக்கும் விலையில்லா மிதிவண்டி கிடைத்தது.இந்த மிதிவண்டி கிடைத்ததன் காரணமாக,யாருடைய உதவியுமின்றி தனியாகவும் தைரியமாகவும் குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு சென்று வர முடிகிறது.இந்த மிதிவண்டிகளை எங்களுக்கு வழங்கிய முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறாக திருவள்ளூர் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் பெற்று பயனடைந்த பள்ளி மாணவ,மாணவியர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.