பதிவு:2023-12-06 15:59:38
திருவள்ளூர் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் விரிவாக்கப் பணி கிடப்பில் போடப்பட்டதால் வீடுகளை சுற்றி தேங்கிய மழை நீருடன் கழிவு நீரும் கலந்திருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்
திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 550-க்கும் மேற்பட்ட தெருக்களில் வீடு, கடைகள், வணிக வளாகங்கள் என, 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்களில் இருந்து நாள்தோறும் 50 லட்சம் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீர் தெருக்களில் வெளியேற்றுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டது. எனவே முழு சுகாதாரமான நகராட்சியாக மாற்றும் வகையிலும், கழிவு நீரை அகற்ற ரூ.54.79 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், கடந்த 2008-இல் தொடங்கி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்றது.
திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் பகுதியில் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது குழாய் மூலம் காக்களூர் ஊராட்சி தேவா நகரில் கட்டப்பட்டு உள்ள, கழிவுநீர் சுத்தகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்தக் கழிவு நீரை ஏரியில் விடுவதால் குடியிருப்பு பகுதி வாசிகளுக்கு சுகாதாரமற்ற குடிநீர் கிடைப்பதாகவும், அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் மழைக்காலங்களில் கழிவு நீருடன், சுத்திகரிக்கப்பட்ட நீரும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுவதால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் அதிகளவில் இருப்பதாலும், முழங்கால் அளவிற்கு கழிவு நீருடன் மழை நீரும் கலந்து தேங்கி நிற்பதால் வீட்டைவிட்டே யாரும் வெளியே வர முடியாத நிலை உள்ளது.
இது குறித்து நகராட்சி நிர்வாகமோ, காக்களூர் ஊராட்சி நிர்வாகமோ (நகராட்சி மற்றும் ஊராட்சி - திமுக நிர்வாகம் ) கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பதில் சொல்வதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தேவா நகர் பகுதி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையேல் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.