பதிவு:2023-12-22 18:21:53
திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் சமூகம் 3.5 சதவீதம் என்ற நிகழ்ச்சி :
திருவள்ளூர் டிச 22 : திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இன்டக்ஸ் ஆக்டிவ் அறக்கட்டளை மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் இணைந்து கிராமங்களில் 100 பேரில் 3.5 சதவீதம் பேரை தன்னார்வலர்களாக தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் தனியார் அரங்கில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் சமூகம் 3.5 சதவீதம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இன்டக்ஸ் ஆக்டிவ் அறக்கட்டளையின் நிர்வாகி அர்ச்சனா கண்ணன் தலைமை தாங்கினார். ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். அந்த அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சிரேயஸ் ஆதித்யா வரவேற்றார்.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது, அரசால் ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் குறித்து குக்கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அதனால் இதுபோன்று திட்டங்கள் குறித்தும், எந்த துறையை அணுகி பயன்பெறலாம் என்பது தொடர்பாக தொண்டு நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்ற தன்னாவலர்கள் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கிராமங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் தன்னார்வலர்களை பாராட்டி நினைவு பரிசுகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தமிழ்நாடு நிர்வாகி மில்லி மேரியா தாமஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பிரித்தா, ராஜலட்சுமி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.