பதிவு:2023-12-22 18:28:10
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டாரங்கள் குறித்த கருத்து கேட்புக் கூட்டம் :
திருவள்ளூர் டிச 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் TANNI திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டு, வளமிகு வட்டாரங்கள் குறித்த கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட திட்டக்குழு தலைவரும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான உமாமகேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில திட்டக்குழு உறுப்பினர்கள், வல்லுநர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், குறியீடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்தும்,பூண்டி வட்டாரத்திலுள்ள பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்துதல், அங்கன்வாடி மையம் மற்றும் பல்வேறு வகையான கட்டுமான வசதிகள் உருவாக்குதல், பள்ளி மற்றும் பிறதுறைகளில் பணியாற்றும் அரசு காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகளை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தும், பூண்டி ஊராட்சி ஒன்றியதை மேம்படுத்தவும், அதனை முதன்மை ஊராட்சி ஒன்றியமாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட அளவிலான 32 துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் கூடுதல் ஆட்சியர் ஓ.என்.சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சி செயலர் பிரசன்னா,மற்றும் வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலானஅலுவர்கள்,பூண்டி வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.