திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும் மாவட்ட முதன்மை நீதிமன்றமாகவும் செயல்பட்டு வந்த அலுவலக கட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அவலம் :

பதிவு:2023-12-28 15:11:45



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும் மாவட்ட முதன்மை நீதிமன்றமாகவும் செயல்பட்டு வந்த அலுவலக கட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அவலம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும் மாவட்ட முதன்மை நீதிமன்றமாகவும் செயல்பட்டு வந்த அலுவலக கட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அவலம் :

திருவள்ளூர் டிச 26 : திருவள்ளூர் மாவட்டம் 1997ஆம் ஆண்டு உதயமானது. அப்போது கலெக்டர் அலுவலக கட்டிடம் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டு அங்கு செயல்பட தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக சென்னை திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது.இதனால் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செயல்பட தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளை விசாரிக்க திருவள்ளூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள், காவல்துறையினர், வழக்கு தொடர்பவர்கள் நீதிமன்றத்தை தேடி அலையும் நிலை இருந்ததால் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் வேண்டுமென்ற வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் இங்கு செயல்பட்டுவந்த மாவட்ட முதன்மை நீதிமன்றம் அங்கு மாற்றப்பட்டது.

இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகமாகவும், மாவட்ட முதன்மை நீதிமன்றமாகவும் செயல்பட்டு வந்த அலுவலக கட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்தி வைக்கும் மையமாகவும் உள்ளது.அவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் உதிரி பாகங்கள் திருடு போகிறது. பல்வேறு வாகனங்களும் அங்கிருந்து காணாமல் போயிருக்கிறது. தொடர்ந்து கொள்ளை சம்பவங்களும் நடைபெறுகிறது.மேலும் இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்லக்கூடிய அவல நிலையும் மேற்பட்டுள்ளது.

இதனிடையே பல்வேறு அரசு அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் நிலையையும் பார்க்க முடிகிறது. திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் ஒரே கட்டிடத்தில் 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாகவே இந்த கட்டிடத்தில் அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அந்த கட்டிடம் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அரசாங்க அலுவலக கட்டிடமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அலுவலகத்திற்கும் குறைந்தபட்ச வாடகையாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் 20 அலுவலகங்களுக்கு மாதத்திற்கு இரண்டு லட்சம் அரசு பணம் தனியாரிடம் போய் சேர்கிறது. குறைத்தது 10 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பணம் வீணாக தனியாரிடம் போய் சேர்ந்து விடுகிறது . எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிடங்கள் கட்டி அங்கு அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும்.

முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும் முதல் மாவட்ட முதன்மை நீதிமன்றமாகவும், செயல்பட்டு வந்த கட்டிடம் தற்போது பாழடைந்து காணப்படுகிறது.இந்த கட்டிடத்தை சீரமைத்து தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களை கொண்டுவந்து வாடகை என்ற பெயரில் செலவாகும் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.