பதிவு:2023-12-28 15:30:07
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தில் மத்திய அரசு நல திட்ட உதவிகள் குறித்து காணொளிகாட்சி வெங்கல் கிராம விவசாயி உரையாடினார் :
திருவள்ளூர் டிச 28 : பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் கிராமங்களில் உள்ளவர்கள் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களில் பொதுமக்கள் பயன்பெறுகிறார்களா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக காணொலி காட்சி மூலம் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளிடம் பிரதமர் உரையாடி விவரங்களை கேட்டறிந்து வருகிறார். இதற்காக பிரதமர் அலுவலகம் மூலம் மத்திய அரசு திட்டங்களில் பயனடைந்தவர்கள் விவரம் 6 மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் தேர்வு செய்தனர். அதில் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல்குப்பம் கிராமத்தை விவசாயி ஹரிகிருஷ்ணன்(43) தேர்வு செய்யப்பட்டார்.
இதற்காக திருவள்ளூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பெருமாள்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளுடன் உரையாடினார்.
அப்போது, வெங்கல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணனிடம் உரையாடினார். மத்திய அரசின் எந்தெந்த திட்டங்களில் பயனடைந்துள்ளீர்கள், எப்படி விவசாயத்திற்கு வந்தீர்கள் போன்ற விவரங்களை கேட்டார். அதற்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் பிஎஸ்சி(கணிப்பொறியியல் பட்டம்) பெற்று ஐசிஐசிஐ வங்கியில் மக்கள் தொடர்பாளராக பணிபுரிந்தேன். அதையடுத்து 2002 இல் எனது தந்தை மறைவுக்கு பின் முழு நேர விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது 5 ஏக்கரில் நெல், கரும்பு பயிரிட்டுள்ளேன். மத்திய அரசு திட்டங்களான பி.எம் கிசான் திட்டம், பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டம், பி.எம் கிசான் கிரெடிட் கார்டு திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டங்களில் பயனடைந்துள்ளேன். அதோடு, நீர் மூலம் கரையும் உரங்களை எளிதில் பயன்படுத்தும் வகையில் டிரோன் மூலம் தெளிக்கவும் பயிற்சி பெற்று வருகிறேன். நவீன முறையில் பயிர் சாகுபடி உற்பத்தி செய்யும் வகையில் வேளாண், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பயிற்சியும் பெற்றுள்ளேன்.
அதற்கு நமது நாட்டில் விவசாயிகள் முதுகெலும்பாக இருக்கின்றீர்கள். மத்திய அரசு திட்டங்களில் அனைவரும் பயன்பெற வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உங்கள் போன்ற மக்கள் அனைவரும் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும், செலவுகளை குறைத்து உற்பத்தி பொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும், அதற்கான வாய்ப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே நான் பணியாற்றி வருவதாக பிரமதர் தெரிவித்தார்.
இதுகுறித்து விவசாயி ஹரிகிருஷ்ணன் கூறியதாவது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராஜ், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு திட்டங்களில் பயனடைந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதுவும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான் உள்பட 6 பேர் ஆதார் அட்டை மூலம் தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து என்னைப்போன்ற விவசாயியுடன் காணொலி காட்சி மூலம் நாட்டின் பிரதமர் மோடி உரையாடியது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என தெரிவித்தார்.