பதிவு:2024-01-08 11:27:00
திருவள்ளூர் நகராட்சியில் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகம், அறிவு சார் மையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். அதனை எம்எல்ஏ வி.ஜிராஜேந்திரன் பார்வையிட்டார் :
திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகராட்சி ஜெயின் நகரில் ரூ.1.97 கோடி ஒதுக்கி நவீன நூலகம், அறிவு சார் மையத்தை அமைக்க கடந்த ஆண்டு தொடங்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த அறிவு சார் மையத்தில் அனைத்து வகையான போட்டித் தேர்வுக்கும் இளைஞர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள ஏதுவாக அனைத்து நூல்களுடன் கூடிய நூலகம், வகுப்பறை, பயிற்சி வளாகம், புத்தகம் படிக்கும் அறை, ஆன்லைன் மூலம் புத்தகம் வாசிக்கும் வகையில் 20 கணினி அடங்கிய அறை, படிகள் மற்றும் பதிவிறக்கம் செய்வதற்கான இணைய சேவை வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து புத்தகம் படிக்கும் வகையில் சாய்தள வசதியுடன் கூடிய வளாகம், வாகன நிறுத்தும் வசதியுடன் அமைக்கும் பணி முடிந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நவீன நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர் மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா. துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை திறந்து வைத்து, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 71 நூலகங்கள் திறக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் நகராட்சியில் உள்ள ஆர்.எம். ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி பள்ளி, மற்றும் பெருமாள் செட்டி தெருவில் உள்ள நகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவிகளை நூலகத்திற்கு அழைத்து வந்து பார்வையிட நகராட்சி ஆணையர் போ.வி. சுரேந்திர ஷா மற்றும் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போது மாணவியரிடம் பேசிய எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் உயர்கல்விக்கு தேவையான புத்தகங்களை தாங்களும் படித்து பயன்பெற வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் நூலகம் குறித்து எடுத்து சொல்ல வேண்டும். போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இங்கே இருப்பதால் தாங்கள் இப்போது தயாராக வேண்டும் என்றும் அறிகுறிப்பினர். இதில் 17 கணினிகள், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான 2563 புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.