பதிவு:2024-01-09 10:37:02
திருவள்ளூர் பெரியகுப்பத்தில் அரசு அனுமதிக்காத நேரத்தில் மதுபானம் விற்பனை : ஒருவர் கைது - 60 மதுபாட்டில்கள் பறிமுதல் :
திருவள்ளூர் ஜன 09 : தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் அனுமதி பெற்ற டாஸ்மாக் பார்-ம் அதே நேரத்தில் தான் திறக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் பெரியகுப்பம் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் உள்ள மதுபான கடை அருகே உள்ள மதுபான கூடத்தில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா, மாவட்ட சிறப்பு காவல் படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நாகேந்திரன், சரவணன் ஆகியோர் அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அங்கே விற்பனையில் ஈடுபட்டிருந்தது சிவகங்கை மாவட்டம் இளையான் குடி தாலுகாவைச் சேர்ந்த ராமராஜ் மகன் முருகன்(31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அரசு அனுமதிக்காத நேரத்தில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்த முருகனை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந் 60 பிராந்தி குவாட்டர் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.