பதிவு:2024-01-09 10:44:43
திருவள்ளூர் புங்கத்தூரில் விபத்தில் காயமடைந்த கூலித் தொழிலாளி மூளைச்சாவு : உடல் உறுப்புகள் தானம் :
திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் புங்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பி.ராஜேஷ் (35). கூலித் தொழிலாளியான இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு நித்யா (10), நித்திஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி காலை வழக்கம் போல் கூலி வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
இதில் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் முதல் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பி.ராஜேஷ் மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து பி.ராஜேஷ்-ன் மனைவி கவிதா கணவரின் உடல் உறுப்புகளான இதயம் மற்றும் இதய வால்வுகள், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், நுரையீரல், 2 கண்கள் ஆகியவற்றை தானமாக அளிக்க தானும் தங்கள் குடும்பத்தாருக்கும் சம்மதம் என தெரிவித்தார் இதனையடுத்து பி.ராஜேஷ்-ன் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு திருவள்ளூருக்கு கொண்டுவரப்பட்டது.
உடல் உறுப்பு தானம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அவர்கள் உயிரிழந்த பிறகு அரசு மரியாதையுடன் நல்அடக்கம் செய்யப்படுவார்கள். ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே இந்த உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி திருவள்ளூர் புங்கத்தூரில் உடல் உறுப்பு தானம் செய்த கூலித் தொழிலாளியின் உடலுக்கு இன்று 9-ஆம் தேதி மாவட்ட கலெகடர் த.பிரபு சங்கர் அரசு மரியாதை செய்த பின் உடல் நல் அடக்கம் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.