பதிவு:2024-01-09 10:42:07
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக திருவள்ளூர் பணிமனையிலிருந்து 50 சதவிகித பேருந்துகள் இயக்கம் : பொது மக்கள் அவதி :
திருவள்ளூர் ஜன 09 : போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, நிலுவையில் உள்ள பண பயன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரி்ககைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் நேற்று நள்ளிரவு முதல் பேருந்துகள் ஓடாது என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் பணிமனையில் இருந்து திருப்பதி, பாண்டிச்சேரி, நெல்லூர் போன்ற பிற மாநிலங்களுக்கும் சென்னை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என பிற பகுதிகளுக்கும் என 52 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் அவசர தேவைக்காக என 3 பேருந்துகள் என மொத்தம் 55 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓட்டுனர்கள் பெரும்பாலானோர் வராத நிலையில் அரசின் கெடுபிடி காரணமாக ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களை வைத்து காலை 7 மணி நிலவரப்படி 50 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளை மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். பென்னாலூர்பேட்டை, ராமஞ்சேரி, சுங்குவார்சத்திரம், மணவூர், திருவாலங்காடு, பெரியபாளையம் போன்ற திருவள்ளூர் மாவட்டத்திற்குள் செல்லும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.