பதிவு:2024-01-21 09:14:38
திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் கிளை மேலாளர் டார்ச்சர் தருவதால் முதல்வர் நடவடிக்கை எடுக்க ஓட்டுனர் கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக கடந்த 25 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருபவர் பத்மநாபன். இவருக்கு பைல்ஸ் எனப்படும் மூலநோய் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக நீண்ட தூர பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓட்டுனர் கேட்டுக் கொண்டதன் பேரில் கிளை மேலாளர் பாஸ்கர் அதற்காக தனியாக கையூட்டு பெற்று குறைந்த தூரத்திற்கான பேருந்தை இயக்க அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.
8 மாதங்கள் வரை நடத்துனர் நீலகண்டன் மூலமாக தனது பணி சலுகைக்காக கிளை மேலாளருக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி வந்துள்ளார். அதன் பின்னர் அவரால் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த தொகையை வழங்க முடியவில்லை. இதனால் மீண்டும் பூந்தமல்லியிலிருந்து கோயம்பேடு மற்றும் கோயம்பேட்டில் இருந்து திருச்சி போன்ற நீண்ட தூர பணிகளை கிளை மேலாளர் பாஸ்கர் அவருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பத்மநாபன் மருத்துவ விடுப்பு எடுத்து அதற்கான கடிதம் கொடுத்த போது அதை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும் மருத்துவ விடுப்புக்கு பின் பணிக்கு வந்த ஓட்டுனரின் ஊதியத்தை கிளை மேலாளர் ஓட்டுனர் பத்மநாபனுக்கு தெரியாமலேயே போலி கையெழுத்திட்டு கையாடல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மேலான் பொது இயக்குனர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர், மண்டல மேலாளர் ஆகியோருக்கு பத்மநாபன் புகார் மனுவை அனுப்பியுள்ளார்.
அந்த மனு மீது விசாரணை நடத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள், உன் மீது குற்றமில்லை என்றாலும் நீ வேறு போக்குவரத்து பணிமனைக்கு பணி மாறுதலில் சென்று விடு அதற்கான ஆணையைப் பெற்றுத் தருகிறேன் என இவரையே அவர்கள் வெளியேற்ற துடிப்பதாக ஓட்டுனர் பத்மநாபன் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் தமிழக முதல்வரும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நான் பணியை ராஜினாமா செய்வதோடு மட்டுமல்லாமல் தற்கொலை செய்துகொள்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை என பத்மநாபன் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.