பதிவு:2024-01-23 21:45:13
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக 2 வாலிபர்களை துரத்தி துரத்தி 4 பேர் கொண்ட கும்பல் : சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய வழக்கில் ஒருவர் கைது - 3 பேருக்கு வலை வீச்சு :
திருவள்ளூர் ஜன 22 : முன்விரோதம் காரணமாக திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே 2 வாலிபர்களை துரத்தி துரத்தி 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே புட்லூர் செல்லும் சாலையில் 2 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் மதுபான கடை அருகே வெங்கத்தூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த பரந்தாமன் மகன் மாதவன்(25) மற்றும் சீதா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் முனுசாமி (31)ஆகிய 2 பேரும் மதுபானம் வாங்குவதற்காக மதுபான கடை அருகே சென்றபோது அங்கு இருந்த நான்கு பேர் கொண்ட கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து கத்தி, கட்டைகளுடன் அந்த கும்பல் முனுசாமி மற்றும் மாதவனை துரத்தி உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய 2 பேரும் திருவள்ளூர் ரயில் நிலையம் 6 வது நடை மேடைக்கு வெளியே கோவில் பகுதியில் ஓடிய போது அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து தலை மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் பலத்த காயம் அடைந்த மாதவன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முனுசாமி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டது மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த சதீ்ஷ், பிரித்திவ்ராஜ், ரிஷிபாலாஜி, சரண் என்பது தெரியவந்தது. மேலும் சதீஷ் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வாழாதது குறித்து மாதவன் என்பவர் கேட்டதால் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சதீ்ஷ்-ன் நண்பர்களான பிரித்திவ்ராஜ், ரிஷிபாலாஜி, சரண் ஆகிய 4 பேரும் புட்லூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மாதவனையும் உடன் இருந்த முனுசாமியையும் பார்த்த போது இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து முனுசாமி திருவள்ளூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த ரிஷிபாலாஜியை கைது செய்த போலீசார் தலைமறைவான சதீஷ், பிரித்திவ்ராஜ், சரண் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.