பதிவு:2024-01-23 21:48:11
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் நாய்கள் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அச்சம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் நாய்களால் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு கோரி்க்கைகளுக்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் நாற்தோறும் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வதுண்டு.
பொதுவாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த ஊராட்சி,நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி அந்தந்த நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.
ஆனால் ஊராட்சி, நகராட்சி,பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நாய்கள் சுற்றித் திரிவதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறைகளை தீர்க்க வரும் பொது மக்கள் நாய் கடியால் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் நாய்களை உள்ளே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.