பதிவு:2024-01-23 22:04:29
பேரம்பாக்கத்தில் 85 வயது மூதாட்டிக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் போலி ஆவணம் மூலம் அபகரிப்பு : நிலத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் ஊராட்சியை பூர்வீகமாகக் கொண்டவர் தனலட்சுமி என்ற மூதாட்டி. இவரது தந்தை கோவிந்தசாமி என்பவர் கடந்த 1985-ல் பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 10 சென்ட் நிலத்தை இவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தை மூதாட்டி தனலட்சுமி விற்க முற்பட்ட போது அந்த நிலம் வேறு ஒருவர் பெயரில் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் விசாரித்த போது பேரம்பாக்கத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுயம்பிரகாசம் என்பவர் அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகவும் பின்னர் அந்த நிலத்தை தனது மகன் திவாகர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்ததாகவும் தெரியவந்தது. திவாகர் தற்போது காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு வகித்து வருவதும், சுயம்பிரகாஷின் மனைவி ஜெயந்தி தற்போது பேரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மூதாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த மோசடி குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த புகாரின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மூதாட்டி தனக்கு 85 வயது நடப்பதாகவும் இதனால் உடல் பலவீனம் காரணமாக நிலத்தை மீட்க தன்னால் சென்று போராட முடியாத நிலை இருப்பதால் மூத்த குடிமக்களுக்கான உள்ள சிறப்பு சட்டத்தின் பேரில் மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு செய்து அந்த நிலத்தை எங்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.