பதிவு:2022-05-11 12:39:35
திருவள்ளூர் அருகே வறுமை காரணமாக பிறந்த ஆண் குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனை செய்த தாய் : மப்பேடு போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு
திருவள்ளூர் மே 11 : திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த சத்தரை கிராமம் கொள்ள காலனியைச் சேர்ந்தவர் நம்பிராஜ், இவருக்கு சந்திரா,என்ற மனைவியும் ஆண், பெண் என இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தனது தாயார் லட்சுமியுடன் சந்திரா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார்.
அப்போது குழந்தை எங்கே என நம்பிராஜ் கேட்டதற்கு குழந்தை இறந்து விட்டது, யாரிடமோ கொடுத்து விட்டேன் என மழுப்பலாக பதில் கூறினார். இதையடுத்து அருகில் வசிப்போர் மற்றும் உறவினர்கள் அவசர போலீஸ் 100க்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மப்பேடு போலீசார் பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் விசாரித்த போது குழந்தை நலமாக இருந்ததாகவும், தாயுடன் குழந்தையை அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மூலம் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிற்கு தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழுமம் நடவடிக்கை எடுக்க எடுக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் நிஷாந்தினி மற்றும் மப்பேடு காவல் நிலைய போலீசார் ஆகியோர் விரைந்து சென்று ஜெயந்தியிடமிருந்து குழந்தையை மீட்டனர். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழும நிர்வாகி அஸ்விலியா மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழும நிர்வாகிகள் மற்றும் போலீசார் ஆகியோர் பெற்ற குழந்தையை விற்ற சம்பவம் தொடர்பாக தாயார் சந்திராவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் எனவே வறுமையின் காரணமாக பிறந்த 5 நாளே ஆன பச்சிளங் குழந்தையை தாய் சந்திரா ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த கமலக்கண்ணன் மனைவி ஜெயந்தி, என்பவரிடம் குழந்தையை 20 ஆயிரம் ரூபாய் விற்பனைக்கு செய்தது தெரிய வந்தது.இதையடுத்து மப்பேடு போலீசார் ஆண் குழந்தையை தந்தை மற்றும் உறவினரிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.