பதிவு:2024-01-31 13:15:51
திருவள்ளூர் அடுத்த வாசனாம்பேட்டில் சட்டவிரோத பிளாஸ்டிக் கிடங்கில் பிளாஸ்டிக் கவர்களை உட்கொண்ட 3 கறவை மாடுகள் உயிரிழப்பு :
திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வாசனாம்பேடு கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் சட்ட விரோதமாக திறந்தவெளியில் கொட்டப்பட்டு தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரனுக்கு சொந்தமான 3 கறவை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்களை உட்கொண்டுள்ளது. இதனால் அந்த 3 கறவை மாடுகளும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் 3 மாடுகளையும் பரிசோதனை செய்ததில் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 3 கறவை மாடுகளை இழந்த குணசேகரன் சட்ட விரோதமாக செயல்படும் பிளாஸ்டிக் கிடங்கு மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று மாலை 3 மணியளவில் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.