பதிவு:2024-01-31 13:34:13
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மனித நேர வார விழா மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் வழங்கினார் :
திருவள்ளூர் ஜன 31 : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் தீண்டாமை ஒழிப்பிற்கு ஆண்டு தோறும் ஜனவரி 24 முதல் 30 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் மனித நேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.செல்வராணி வரவேற்றார். இதில் தாட்கோ மேலாளர் இந்திரா, தூய்மைப் பணியாளர்களுக்கான மாநில உறுப்பினர் ‘ஹரிஷ்குமார், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்கள் மதியழகன், சித்ரா, ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்கள், காப்பாளினிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர் நல அரசு பள்ளிகளில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் பயின்று இந்திய உயர்கல்வி தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். தேர்வாய் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ப.கமலக்கண்ணன் நன்றி கூறினார்.