பதிவு:2024-02-05 08:11:39
டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 3 மாற்றுத்திறனாளி உட்பட 263 பேருக்கு பணி நியமன ஆணைகள் : எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 04 : டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 100 வேலைவாய்ப்பு முகாம்கள் ,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பாண்டூர். இந்திரா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இம்முகாமில் சென்னை மண்டல வேலைவாய்ப்பு) இணை இயக்குநர் தேவேந்திரன் திட்ட விளக்கவுரையாற்றினார். இம்முகாமில், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு முகாமில் தேர்வு பெற்ற வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பேசினார்.
இம்முகாமில் பல்வேறுஅரசுத் துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு அத்துறைகளின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு வழிகாட்டுதல் செய்யப்பட்டது.படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு நோக்கத்தினை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாக அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு அரசு வேலை வாய்ப்பினை பெற வழிகாட்டுதல், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருதல், திறன்பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து இலவச திறன் பயிற்சி பெற வழிகாட்டுதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்முகாமில் 134 முன்னணி நிறுவனங்களும் 5 திறன்பயிற்சி நிறுவனங்களும் கலந்துகொண்டன. இம்முகாமில் 1871 வேலைநாடுநர்கள் கலந்துக்கொண்டதில் 263 வேலைநாடுநர்களுக்கு (3 மாற்றுத்திறனாளி உட்பட) பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 109 வேலைநாடுநர்கள் திறன் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்காக 351 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பணி நியமன ஆணை பெற்றவர்கள் தமிழ்நாடு அரசுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இம்முகாமில் இந்திரா பொறியியல் கல்லூரி முதல்வர் வேல்விழி, திமுக நிர்வாகிகள் மோ.ரமேஷ், கூளூர் ராஜேந்திரன்,நேதாஜி, கமலக்கண்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் திருவள்ளுர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் விஜயா நன்றி கூறினார்.