பதிவு:2024-02-05 15:44:14
திருவள்ளூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி டிட்டோ ஜாக் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் பிப் 05 : திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் ராஜாஜி, முரளி, பாலுமகேந்திரன், முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், டிட்டோ ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ், மற்றும் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண்- 243 -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோர் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக்கொண்டு காணொளி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தெரிவித்த 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ம் தேதி சென்னையில் மாநில, மாவட்ட வட்டார, நிர்வாகிகள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ருக்மாங்கதன், இளங்கோவன், ஜான், ஆனந்த், சுவர்ணாபாய் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.