பதிவு:2022-05-13 13:31:48
ஆவடி மாநகராட்சியில் உள்ள கோவில்களில் புதிதாக பசு மடம் அமைப்பதற்கான பணிகள் : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு :
திருவள்ளூர் மே 12 : சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் உபரியாக உள்ள பசுக்களையும், தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளையும் பாதுகாத்து பராமரிக்கும் வகையில் 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய பசு மடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததற்கிணங்க, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோவில் பதாகை, பூம்பொழில் நகரில் உள்ள அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், திருமுல்லைவாயில் அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் புதிதாக பசு மடம் அமைப்பதற்கான பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் நேரில் ஆய்வு செய்தனர்.அப்பொழுது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கும் திட்டம் பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும்,200-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, இந்த ஆய்வின் அடிப்படையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து தரவும், யானைகள் மற்றும் பசுக்களை பராமரிக்கவும் திருக்கோயில்களின் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2021 – 2022 மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட 165 அறிவிப்புகளில் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும். முதற் கட்டமாக திருக்கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய பசு மடம் ஆவடி கோயில் பதாகை அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு செந்தமான 25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய பசுமடம் புதிதாக அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டோம். விரைவில் பசுமடம் கட்டுவதற்கான மதிப்பீடு தயார் செய்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.தொடர்ந்து, திருமுல்லைவாயில் அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயிலில் எதிரே உள்ள திருக்குளம் நகராட்சி நிர்வாகத்தால் தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை இத்திருக்குளத்தை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். இக்கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, மண்டல குழுத் தலைவர் ஜி.ராஜேந்திரன், ஆவடி மாநகராட்சி பொறியாளர் பி.மனோகரன், அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் சீதாராமன், செயற்பொறியாளர் தேவேந்திரன், ஆவடி மாநகராட்சி உதவி பொறியாளர் சத்தியசீலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அறநிலையத்துறை மற்றும் ஆவடி மாநகராட்சி அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.