பதிவு:2024-02-10 21:11:19
திருவள்ளூர் மாவட்ட துறை அலுவலர்களுக்கான உலகளாவிய அணுகல் தன்மை 2021-க்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி :
திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் துறை அலுவலர்களுக்கான உலகளாவிய அணுகல் தன்மை 2021-க்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு ,உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றத்திறனாளிகளுக்கு உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக தமிழ் நாட்டின் கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி அவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் மேம்படுத்திட இயலும். மேலும் இதன் ஒரு அங்கமாக அனைத்து அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள், பொது இடங்கள், திரையாரங்குகள், பூங்காக்கள், சுற்றுலாதலங்கள், ஆன்மீக தலங்கள் மற்றும் வியாபார அங்காடிகளில் மாற்றுத்திறனாளிகள் தங்கு தடையின்றி எளிதில் சென்று வர மாவட்ட துறை அலுவலர்களுக்கு உலகளாவிய அணுகல் தன்மை 2021-க்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள துறை அலுவலர்கள், பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடந்தது.
இப்பயிற்சியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் திட்ட அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் வழி நடத்தினர்.ஊரக வளர்ச்சி நிர்வாக பொறியாளர் ராஜவேல், தமிழ்நாடு ஸ்பாஸ்டிக நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ஜீவா அழகு கண்ணன் மற்றும் சென்னை தொண்டு நிறுவனம் சுல்தான் காதர் விசேஷ் ஆகியோர் அணுகல் தன்மை குறித்த வழிமுறைகளை எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.