பதிவு:2024-02-14 18:01:30
செஞ்சிபானம்பாக்கம் - கடம்பத்தூர் இடையே ஓடும் மின்சார ரயிலில் திடீர் புகை : பயணிகள் அலறியடித்து ஓட்டம் :
திருவள்ளூர் பிப் 14 : வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு சாதாரண பயணிகள் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அரக்கோணம் வழியாக திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயிலானது செஞ்சிபனம்பாக்கம் - கடம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையே வந்தபோது ரயிலில் பிரேக்கிங் சிஸ்டம் கோளாறு காரணமாக பேட்டரியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் ரயில் பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டது.
மின்சார ரயிலின் பேட்டரியிலிருந்து புகை வருவதால் வண்டி எரியத்தொடங்கியதாக நினைத்து பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர். அதன் பின்னர் ரயில்வே ஊழியர்கள் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்லும் பயணிகள் நடுவழியில் தவித்தனர்.
அதன் பின்னர் எதிரே வந்த ரயில் ஓட்டுனர் நிறுத்தி சோதனை செய்து புகை வருவதை கட்டுப்படுத்தினார். இதனால் 30 நிமிடத்திற்கு பிறகு புறப்பட்டு மெதுவாக கடம்பத்தூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனையடுத்து மீண்டும் ரயிலை இயக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை ரயில் ஓட்டுனர் சோதனை செய்துவிட்டு அங்கிருந்து மீண்டும் 20 நிமிடம் கழித்து மீண்டும் புறப்பட்டு மெதுவாக இயக்கி திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. பின்னர் பெரும்பாலான பயணிகள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி வேறு ரயில்களில் ஏறி சென்றனர்.