பதிவு:2024-02-14 18:16:33
திருவள்ளூரில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்பு :
திருவள்ளூர் பிப் 14 : குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009” இன்படி. ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி அதை மேலாண்மைச் செய்ய பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர் உள்ளிட்ட 20 பேர்கள் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழு திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 1336 அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் வா.பாலமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஷியாம் சுந்தர், மரியசூசை, ரத்தின விஜயன் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆட்சியர் பேசும் போது, காமராஜர் முதலில் பள்ளிக்கூடங்கள் கட்டி பிள்ளைகளை படிக்க அனுப்பி வைத்து, மதிய உணவு திட்டம் கொண்டு வந்த பிறகு வந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், எம்ஜிஆர் என ஒவ்வொருவரும் இந்த கல்விக்கு அடித்தளம் அமைத்தனர்.தற்போது “இல்லம் தேடி கல்வி திட்டம், எழுத்தும் போன்ற திட்டம் பள்ளி மேலாண்மை குழுவின் முலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மாணவர்கள் அதிகளவில் செல்போனை உபயோகப்பதும், போதை பொருள் பயன்படுத்துவதும் வருந்தத்தக்கதாகும். இந்த மாதிரி விஷயங்களை தடுப்பது காவலர்கள் வேலை மட்டுமல்ல நம்முடைய வேலையும் தான்.பள்ளி மேலாண்மை குழுவினுடைய நோக்கம் அந்தப் பள்ளிகள் எதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளதோ அதனுடைய முழு நோக்கத்தையும் முழு பலனையும் நீங்கள் வெளி கொண்டு வரவேண்டும். ஆசிரியர்களின் அறிவு உங்கள் பள்ளியின் மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கிறது. கட்டமைப்பு குறைபாடுகளை கணக்கு எடுப்பது மட்டுமே உங்கள் பணி அல்ல, உங்கள் பள்ளிக்கூடத்தில் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பாக கிடைக்க வேண்டும். அதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நம்ம அரசு பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் நீங்க தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுக்க வேண்டும்.; எல்லா பள்ளிக்கூடத்திலும் நம்ம பள்ளிகளை தலை சிறந்த பள்ளியாக உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பேசினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2023-2024-ஆம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 16 அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களைப் பாராட்டி சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.