பதிவு:2024-02-16 13:33:09
திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றப்பின்னணியில் 536 ரவுடிகள் : அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட போலீசார் கண்காணிக்க எஸ்.பி. சீனிவாசப் பெருமாள் அறி்வுரை :
திருவள்ளூர் பிப் 16 : 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு பழைய குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி. சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள 22 காவல் நிலையத்தில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதன்படி பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 561 ரவுடிகள் கண்டறியப்பட்டனர். இதில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், மற்றும் பல்வேறு வழக்குகளில் 19 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக மீதம் உள்ள 536 ரவுடிகளை அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் கண்காணிக்க எஸ்.பி. சீனிவாசப் பெருமாள் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 83 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரேனும் அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.