பதிவு:2024-02-18 22:46:26
திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் 50-க்கும் மேற்பட்டோர் கைது :
திருவள்ளூர் பிப் 17 : தொழிலாளர், விவசாயிகள் விரோத மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் தொழிலாளர், விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்பேரில் திருவள்ளூர் உழவர் சந்தை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் ஜி.ஜெயபால் தலைமை தாங்கினார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ராமதாஸ், ஐ.என்.டி.யு.சி நிர்வாகி எம்.பன்னீர்செல்வம், ஏ.ஐ.டி.யு.சி சங்க மாவட்ட தலைவர் கே.கஜேந்திரன், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அப்போது, திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்ய வேண்டும். விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்தல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி சமவேலைக்கு சம ஊதியம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சி.ஐ.டி.யு, ஏஐசிசிடியு சங்கங்களைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.