பதிவு:2024-03-01 19:15:04
கூட்டுறவு வங்கிகளில் கடன் நிலுவை வைத்துள்ளோர் வட்டிச் சலுகை பெற நாளை சிறப்பு கடன் தீர்வு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :
திருவள்ளூர் மார்ச் 01 : கூட்டுறவு சங்கங்களில் நீண்டகாலமாக கடன் நிலுவை வைத்துள்ளோர் வட்டிச் சலுகை பெற திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கிக் கிளைகளில் நாளை 2-ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு கடன் தீர்வு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் இந்த மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் நாளை (மார்ச்-2) சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் கூட்டுறவு சங்கங்களில் நீண்டகாலமாக கடன் நிலுவையில் உள்ள கடன்காரர்கள், இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று வட்டிச் சலுகை பெற ஒப்பந்தம் பெற்றுக் கொள்ளலாம். இந்தச் சலுகை வரும் 12-ஆம் தேதி நிறைவடைய உள்ளதால், தகுதியான கடன்காரர்கள் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களை அணுகி ஒப்பந்தம் ஏற்படுத்தி பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.