பதிவு:2022-05-13 14:02:16
ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.26.90 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடப் பணிகள் : பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருவள்ளூர் மே 13 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி பகுதியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக ஜப்பான் நிதியுதவியுடன் ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடமாக இரண்டாம் நிலை பராமரிப்பு அரசு மருத்துவமனை கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு 05.03.2020 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, ரூ.26.90 கோடி மதிப்பீட்டில் பிஸ்கே என்ற நிறுவனத்தின் ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இம்மருத்துவமனை சுமார் 54,235 சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில் கீழ்தளத்தில் புறநோயாளிகள், அதனையொட்டி, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பொதுப்பிரிவு புறநோயாளி பிரிவு ஒன்று, செவிலியர் அறை ஒன்று, எக்ஸ்ரே அரை என்று கீழ்தளத்தில் அமையப்பட்டுள்ளது. முதல் தளத்தில் பெண்களுக்கென 30 தனி படுக்கைககள் கொண்ட அறை, அதுபோன்று இரண்டாவது தளத்தில் ஆண் நோயாளிகளுக்காக 30 படுக்கைகள் கொண்ட அறையும், மேல்தளம் மூன்றவாது தளத்தில் இரண்டு அறுவை சிகிச்சை அறைகள், ஆலோசனை அறை, மீட்பு அறை, தூய்மையின்மை நடைக்கூடம், அலுவலகம், வைப்பறை போன்றவை உள்ளது. அதுமட்டுமின்றி, மின்தூக்கி இரண்டு, அனைத்து தளத்திற்கும் சாய்வுதள பாதை, படிக்கட்டு, கழிவறைகள், மின்சார அறை, கிழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, தீயணைப்பு சாதன அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள், சமையலறை, மின்னாக்கி, வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகளுடன் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு உறுதி தன்மையோடு சிறப்பாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டடப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாத், துணை மேயர் எஸ்.சூரியகுமார், பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் கட்டுமானம் - மருத்துவ கண்காணிப்பு பொறியாளர் அரசு ராஜசேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் நாராயண மூர்த்தி, சிவகாமி, புனிதவேல், உதவி செயற்பொறியாளர் புஷ்பலிங்கம், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் (பொ) எம்.ஏ.இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.