பதிவு:2024-03-07 07:39:16
பொது விநியோகத் திட்ட குறை தீர் முகாம் வருகிற 9-ஆம் தேதி 9 வட்டங்களில் நடைபெறுகிறது : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :
திருவள்ளூர் மார்ச் 05 : உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரின் சுற்றறிக்கையில் பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டங்களிலும், பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை,, ஆவடி, திருத்தணி, பள்ளிப்பட்டு ஆர்.கே.பேட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வருகிற 9-ஆம் தேதி சனிக்கிழமை அன்று வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும்; புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.
மேலும் அந்தியோதய அன்னயோஜனா குடும்ப அட்டைகள் மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் வைத்திருப்போர் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அவர்களது விரல் ரேகையை தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.