பதிவு:2022-05-17 12:14:09
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை கேட்டு மனு கொடுக்க வந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமி மீது ஆடி கார் மோதி விபத்து : பலத்த காயம் அடைந்த மாற்றுத்திறனாளி சிறுமியை ஆட்சியர் விசாரித்தார் :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளிக்க மாவட்டம் முழுவதுலுமிருந்து ஏராளமானோர் வருகை தருவதுண்டு. அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தட்சிணா மூர்த்தி என்பவரது 13 வயது வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமி டி.யுகா என்பவரை அவரது தாய் அழைத்துக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நடைபாதையில் அமர்ந்திருந்தார்.
அப்போது ஆட்சியர் அலுவலகம் வந்த TN02 BQ 6226 என்ற ஆடி கார் சிறுமி உட்கார்ந்து இருப்பதை பார்க்காமல் ஓட்டி வந்து காலில் ஏற்றியுள்ளார். இதனால் அலறி துடித்த சிறுமியை மயக்கமடைந்தார். இதனையடுத்து கோரிக்கை மனு அளிக்க வந்த பொது மக்கள் மீட்டு தண்ணீர் தெளித்து மீட்டனர். ஆனால் காரில் வந்த நபர்கள் மாற்றுத் திறனாளி சிறுமி மீது கார் ஏற்றியது குறித்து அலட்சியமாக பதில் அளித்ததுடன் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், உடனடியாக சிறுமியை தூக்கிக் கொண்டு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
சிறுமியை விசாரித்த மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆடி காரில் வந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.